குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் மாயமான 462 மீனவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை என, மீட்புக்குழு அதிகாரியான ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கடலில் மாயமான மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை செயலாளரும், மீட்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரியான ககன் தீப்சிங் பேடி, தற்போதைய கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 43 விசைப்படகுகளில் சென்ற 427 மீனவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை என்றும், அதேபோல் வள்ளங்களில் சென்ற 35 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான், மீனவர்களுக்கான நிவாரண பணிகள் நடந்து வருவதாகவும், புயலால் காயம் அடைந்த மீனவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வரும் செவ்வாயன்று வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.