ஞாயிறு, 10 டிசம்பர், 2017

இந்தியாவை உலுக்கிய முக்கிய ஊழல்கள்! December 10, 2017

Image

இந்தியாவை உலுக்கிய முக்கிய ஊழல்கள் எவை, எவை? யார், யாருக்கு தொடர்பு? ஊழல்களால் எந்ததெந்த அரசியல் கட்சிகளுக்கு சரிவு என்பது குறித்து, விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

2007 -ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு என புகார் எழுந்தது. இந்திய அரசுக்கு ரூ1.76 கோடி இழப்பு என தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். திமுக எம்.பி. கனிமொழியும் 2ஜி வழக்கில் கைதானார். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது.

காங்கிரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய ஊழல், போஃபர்ஸ் ஆயுத பேர ஊழல். 1986 ம் ஆண்டு, ஸ்வீடனின் போஃபர்ஸ் நிறுவனத்துடன் ஆயுதங்கள் வாங்குவதற்காக 1,437 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு போஃபர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்திக்கு போஃபர்ஸ் ஊழலில் தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்தது. 1999ம் ஆண்டு  சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கையில் பட்நாகர், குவாத்ரோச்சி, வின் சத்தா மற்றும் ராஜீவ் காந்தியின் பெயர்கள் இடம்பெற்றன. போஃபர்ஸ் விவகாரத்தில், 250 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது.

பீகாரில் மாட்டுத்தீவன ஊழல், லாலு பிரசாத் யாதவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 1990ம் ஆண்டு, மாட்டுத்தீவனம் வாங்குவதில் பீகார் அரசாங்கத்தால் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத் முக்கிய குற்றவாளி என புகார் கூறப்பட்டது. லாலு ஆட்சியில் இருந்த போது அவரது வீட்டில் சி.பி.ஐ சோதனை நடந்தது. 1997ம் ஆண்டு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு கைது செய்யப்பட்டதை அடுத்து, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு பிரசாத். மாட்டுத்தீவனம் வாங்கியதில், ரூ.950 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது.

மத்தியபிரதேசத்தில் தொழில் முறை தேர்வுகளுக்கான வாரியம் 'வியாபம்'. வியாபம் மூலம் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தகுதியற்ற மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள்  கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த வியாபம் மெகா ஊழலில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரும் அடிபட்டது. 2,000 பேருக்கு மேல் கைதான நிலையில், 49 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் ஊழல், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. 2010 ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டி முறைகேடு  நடந்ததாக புகார் கூறப்பட்டது. மைதானங்கள் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் போன்றவற்றில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகவும்,டிவி, CHAIR உட்பட பல பொருட்களை டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுக்கு எடுத்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. போட்டி ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்.பி-யுமான சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டார்.

17 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித்துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக தகவல் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி நவின் ஜிண்டால் கைதானார். 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

கார்கில் போரின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட ஆதர்ஷ் திட்டம் உருவாக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு பிறகு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உறவினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மகாராஷ்டிராவில் அப்போது முதல்வராக இருந்த அசோக் சவானின் மாமியாருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் பாஜகவின் சுரேஷ் பிரபுவின் பெயரிலும் ஒரு வீடு இருந்ததாக தகவல் வெளியானது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரது பெயரும், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழலில் சிக்கியது.

கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான சவப்பெட்டிகளை வாங்க, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சவப்பெட்டிகளுக்கு 
உண்மையான விலையை விட, 13 மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போதைய பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 3 ராணுவ அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றஞ்சாட்டியது. இறுதியில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ 
அறிவித்ததால் வழக்கு முடிவடைந்தது.


கேரளாவில், வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தி தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மக்களிடம் வசூல் செய்த குற்றத்திற்காக
சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், உம்மன் சாண்டிக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தந்ததாக சரிதா நாயர் பரபரப்பு பேட்டி அளித்தார். சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரித்த விசாரணை கமிஷனின் அறிக்கையில் உம்மன் சாண்டி மீது குற்றஞ்சாட்டியது. 

சாரதா சிட் பண்ட் ஊழலும், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 2013ம் ஆண்டு, மேற்குவங்கம், ஒடிசா, உட்பட பல மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்தது. 17 லட்சம் பேர் சாரதா நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையின் மதிப்பு 2,500 கோடி ரூபாய் ஆகும். பணத்தை இழந்த அப்பாவி மக்கள் பலர் தற்கொலை செய்துக்கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, எம்.எல்-ஏக்கள் கைதானபோது, முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்த்தின. 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கும், இந்திய அளவில் பெரும் விவாத பொருளாக மாறியது. 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது. வருமானத்துக்கு மீறி சொத்து குவிப்பு, ஸ்பிக் பங்கு விற்பனை, நிலக்கரி ஊழல், டான்ஸி நிலம், கலர் டிவி ஊழல், சுடுகாட்டுக்கூரை ஊழல் என பல ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தன. கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் வழக்குகளால் 2 முறை முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா.