சனி, 9 டிசம்பர், 2017

அதிகளவில் செலவு செய்யப்படும் வேட்பாளர்கள், வெற்றி பெற்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.” December 9, 2017

Image

தேர்தல் விதிமுறைகள தாண்டி அதிகளவில் செலவு செய்யப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் அனுமதி பெற்ற நபர்கள், வாகனங்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் எனவும், அதற்கு மேலாக ஈடுபடக்கூடிய வாகனங்கள் மற்றும் நபர்களின் செலவு, வேட்பாளர்களின் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படும், என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும்  மீண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறக்கூடிய வேட்பாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுவரை, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 7 புகார்களும், பணப்பட்டுவாடா தொடர்பாக 2 புகார்களும் வந்துள்ளதாகவும், மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வரும் இஸ்லாமியர்களிடம் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது வேட்பாளர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்களும்  பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர்  மருதுகணேஷ் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து, திமுக எம்எல்ஏக்கள் சுதர்சனம், கீதா ஜீவன், பூங்கோதை மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்று ஆவுடையப்பன் கருத்து தெரிவித்தார்.

இதுபோல், ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் மசூதி பகுதியில்,  டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தபின்னர் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். 

ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீடுவீடாக சென்று, வாக்கு சேகரித்தார். மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும்,  பாஜக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

இதனிடையே, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள நேதாஜி நகர், வ.உ.சி நகர் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், தங்கள் பெயர்கள் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறி  தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். ஆனால் வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதைத்  தொடர்ந்து, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Related Posts: