புதன், 2 மே, 2018

முஸ்லிம் சமூகத்திலும் நிறைய திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை.

நீங்கள் எவ்வளவு முகம் சுளித்தாலும் சரி- “இறைவனின் படைப்பில் அப்படியெல்லாம் இல்லவே இல்லை” என்று எவ்வளவு வாதிட்டாலும் சரி-
முஸ்லிம் சமூகத்திலும் நிறைய திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை.
இவர்கள் ஆணா, பெண்ணா,
இவர்களுக்குத் தேவை மனவளப் பயிற்சியா, உரிய மருத்துவ சிகிச்சையா எனும் விவாதங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
அது குறித்து நிறைய பேசியாயிற்று.
முதலில் இவர்களின் ஈமானை- இறைநம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமை.
மற்ற பெற்றோர்கள் செய்யும் தவறைத்தான் முஸ்லிம் பெற்றோர்களும் செய்கிறார்கள்.
திருநங்கை என்று தெரியவந்தால் வீட்டை விட்டுத் துரத்திவிடுதல், புறக்கணித்தல், திட்டுதல், அடித்தல் என்று எல்லாக் கொடுமைகளையும் அரங்கேற்றுகிறார்கள்.
வீட்டை விட்டு ஓடிப் போகும் முஸ்லிம் திருநங்கைகளும் மும்பை, பெங்களூர் எனப் பல ஊர்கள் சுற்றி, ஈமானை இழந்து, கூவாகம் வந்து அரவாணுக்குத் தாலி கட்டி, தாலி அறுத்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருநங்கைகளாகவே இருந்தாலும் ஈமானிய சூழலில் இவர்கள் வாழ்வதற்கும், பிச்சையெடுத்தல், பாலியல் வக்கிரங்களில் ஈடுபடாமல் நேர்மையான வழியில் பொருளீட்டவும் இவர்களுக்குச் சில அடிப்படை வசதிகளையாவது சமுதாயம் செய்து தரவேண்டும்.
அருள்கூர்ந்து, முஸ்லிம் திருநங்கைகளின் ஈமானைக் காப்பாற்றுவதற்காவது ஏதேனும் செய்தே ஆகவேண்டும்.
முஸ்லிம் அமைப்புகள் நினைத்தால் அந்தப் பாவப்பட்ட திருநங்கைகளின் வாழ்வில் நிச்சயம் ஈமானிய ஒளியை ஏற்றமுடியும்.
-சிராஜுல்ஹஸன்