திங்கள், 14 மே, 2018

காவிரி வரைவு அறிக்கை தாக்கல்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து May 14, 2018

Image
காவிரி விவகாரம் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வரைவறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு அதனை எப்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 

தமிழ்நாட்டு மக்களும் - காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்.

அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு, வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்றெல்லாம் மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

மேலும் மே 16ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது தமிழக அரசு, தனது தரப்பு வாதங்களை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தவும் நாளை அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தை, தமிழக அரசு கூட்டம் வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.