செவ்வாய், 15 மே, 2018

யார் இந்த சித்தராமையா? May 15, 2018

யார் இந்த சித்தராமையா? 

கடந்த சில மாதங்களாகவே அதிரடியாக கருத்துகளை சொல்லி இந்திய பரபரப்பை ஏற்படுத்தி தொடர்ந்து LimeLight-லேயே இருந்த சித்தராமையா, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டு நாட்கள் கூலாக இருக்க சொன்னார். இந்த அதீத நம்பிக்கைக்கு காரணம், தான் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் கர்நாடகாவிற்கு நல்லது செய்திருக்கிறோம் மக்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று தீர்க்கமாக நம்பியது தான். ஆனால், கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூருவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தரமனஹுந்தி என்னும் குக்கிராமத்தில் சித்தரமே கெளடா மற்றும் போரம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் சித்தராமையா. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பத்தில்  இரண்டாவது மகனாக பிறந்த சித்தராமையாவுக்கு, உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். தனது 10-வது வயது வரை அடிப்படை கல்வியைக் கூட பயிலவில்லை சித்தராமையா. தனது தந்தைக்கு ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கும் விவசாயத்திலும் உதவியாய் இருந்துவந்தார். அதன்பின்னர் சித்தராமையாவின் தந்தைதான் வலுக்கட்டாயமாக பள்ளியில் சேர்த்தார். 

'விவசாயி மவன் ஒத்தைல நிக்கான்'

வறுமையில் சிக்கி தவித்தது சித்தராமையாவின் குடும்பம். இருந்தாலும் சித்தராமையாவின் படிப்பிற்காக சிறுகசிறுக சேர்த்தார் சித்தராமையாவின் தந்தை. பள்ளியில் சேர்ந்த பிறகு தன்னால் எந்த அளவிற்கு தன் தந்தைக்கு உதவியாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு உதவியாக இருந்தார் சித்தராமையா. 

இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார் சித்தராமையா. பிறகு மைசூரு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சித்தராமையாதான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி மற்றும் முதல் வழக்கறிஞர். சட்டப்படிப்பிற்கு பிறகு சிக்கபோரையா என்ற வழக்கறிஞரிடம் ஜூனியராக பணியாற்றியதோடு, அருகிலுள்ள கல்லூரியில் சட்டம் பயிற்றுவித்தார் சித்தராமையா. 

தேர்தல் களத்தில் பெடலெடுத்த சித்தராமையா

'சமூக நீதி கோட்பாடுகளை உள்வாங்கியதால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் 1977ல் 'லோக் தள' கட்சியில் சேர்ந்தார். 1983ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மைசூர் சாமூண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது கர்நாடக முதல்வராக‌ ராமகிருஷ்ண ஹெக்டேவின் சமதர்ம கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவரின் 'ஜனதா கட்சி'யில் இணைந்தார். சித்தராமையாவின் போராட்ட குணமும், சமூக அக்கறையையும் கண்டு வியந்த ராமகிருஷ்ண ஹெக்டே, அவருக்கு போக்குவரத்து அமைச்சர், கால்நடை நலத் துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வழங்கினார்.

1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற‌த்திற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டதால் சித்தராமையா 1992ஆம் ஆண்டு கர்நாடக மாநில ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதால்,தேவகவுடாவின் அமைச்சரவையில் துணை முதல்வர் பதவிக்கு முன்னேறினார்.

1999ல் ஜனதா தளம் இரண்டாக உடைந்த போது தேவகவுடாவுடன் இணைந்து வெளியேறி, 'மதசார்பற்ற ஜனதா தளம்' என்ற கட்சியை தொடங்கினர். தேவகவுடா அக்கட்சியின் தலைவராகவும், சித்தராமையா மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியில் மீண்டும் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

சித்தராமையா முதல்வராக உயர்ந்த கதை

இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பிஜேபியுடன் கைகோர்த்து குமாரசாமி ஆட்சி அமைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி, 'மக்களுக்கான சமூக நீதி இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களை சந்தித்து போராட்டங்களை முன்னெடுத்தார். சித்தராமையாவின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள், அவர் செல்லும் இடம் எல்லாம் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடினர். கர்நாடகாவில் சித்தராமையாவின் தனிப்பட்ட செல்வாக்கு உயர்ந்தது. 

சித்தராமையாவிற்கு இருக்கும் செல்வாக்கைப்பார்த்து வியந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸில் இணையுமாறு சித்தராமையாவிற்கு அழைப்பு விட, சோனியாகாந்தியின் அழைப்பை ஏற்று 2005ல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தியின் முன்னிலையிலேயே காங்கிரசில் இணைந்தார் சித்தராமையா. 

2008ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் சித்தராமையா. ஆனால் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. அதன்பிறகு ஊழல் புகாரில் சிக்கி எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக, அதன்பிறகு சதானந்த கெளடா முதல்வராக பதவியேற்றார். சதானந்த கெளடாவை நீக்காவிட்டால் பாஜகவிலிருந்து விலகுவேன் என்ற எடியூரப்பாவின் மிரட்டலை அடுத்து ஒருவருடத்திற்குள்ளாக ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக பதவியேற்றார். இந்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் சித்தராமையா. பாஜக தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் குறைபாடுகளை கர்நாடகத்தின் மூலைமுடுக்குகளிலும் கொண்டு சேர்த்தார். சித்தராமையாவின் அதிரடி செயல்பாடுகளும், போராட்ட குணமும்  காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கர்நாடக மக்களிடையே அடுத்த முதல்வர் சித்தராமையா தான் என்ற பிம்பத்தை உருவாக்கியது.

2013 பொதுத்தேர்தலில் அதே வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடகாவின் முதல்வரை தேர்ந்தெடுக்க கட்சியின் மேல்மட்ட குழு கூடியது. கர்நாடகாவின் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று கர்நாடகாவின் 22வது முதல்வரானார் சித்தராமையா.

முதல்வர் 'பேட்' பிடித்து அடித்து ஆடிய சித்தராமையா

காங்கிரசில் பல மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில், 8 வருடங்களுக்கு முன்பு எதிரணியில் இருந்தவர் ஒரு பழம்பெரும் கட்சியில் இணைந்து முதல்வராக முடியுமா என்று அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. தனது செயல்பாடுகள் மூலம் அதை செய்துகாட்டினார் சித்தராமையா. குரும்பா சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதும் அதுவே முதல்முறை.

தன் பதவியேற்ற முதல் நாளையே அதிரடியாக தொடங்கினார் சித்தராமையா. பதவியேற்றவுடன் முதல்நாள் முதல் கையெழுத்தாக தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தார். 

சித்தராமையாவின் அரசியல் நகர்வுகளில் முக்கியமானது லிங்காயத்துகளை தனிமதமாக அறிவித்தது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவேஷ்வராவை பின்பற்றுபவர்கள்தான் லிங்காயத்துகளும், வீரசைவ லிங்காயத்துகளும். 6.5 கோடி மக்கள்தொகை கொண்ட கர்நாடகத்தில் லிங்காயத்துகளின் எண்ணிக்கை மட்டும் 13%. கர்நாடக சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 47 பேர் லிங்காயத்துகள். சுமார் 100 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளையே மாற்றும் அளவுக்கு எண்ணிக்கை பலம் உள்ளவர்கள்.

கர்நாடக மக்களின் மிக முக்கிய உணர்வு ரீதியிலான பிரச்னையான காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் பக்கமே நின்றிருக்கிறார் சித்தராமையா. எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் சரி, கர்நாடகாவின் முதல்வரான போதும் சரி ஆரம்பம் முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பது தான் சித்தராமையாவின் நிலைப்பாடு. கடந்த பிப்ரவரியில் தமிழகத்திற்கு வழங்கிய நீரில் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, கர்நாடக மாநில விவசாயிகள் மட்டுமல்லாமல், பெங்களூரு மாநகர  மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர்  வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் காவிரி தாய் கர்நாடக  மக்களை காப்பாற்றி உள்ளாள் என்று முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கன்னடம் எங்கள் உயிருக்கு நேர்”

இவற்றையடுத்து கையில் எடுத்தது மொழி. "இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது. இந்தி திணிப்பை கர்நாடக மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கன்னடத்தை கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்காவிட்டால் கன்னட மொழியை அவமரியாதை செய்வதாக அர்த்தம். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல, கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று இந்தி திணிப்புக்கு எதிராக சித்தராமையா சாட்டையை சுழற்ற அதன் பிறகு நம்ம மெட்ரோ, சாலையோர மைல்கல் ஆகியவற்றில் இந்தி மொழியை அழிக்கும் போராட்டங்களில் இறங்கினர் கன்னட மக்கள் மற்றும் அமைப்புகள்.

சாதனை நாயகன் சித்தராமையா

சித்தராமையாவின் சாதனைகளில் மிக மிக முக்கியமானதாக பார்க்க வேண்டியது கடந்த ஐந்தாண்டு ஆட்சியை எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவு செய்ததுதான். 1977க்குப் பிறகு 40 ஆண்டுகால கர்நாடக அரசில் நிகழ்ந்திராத அதிசயம் அது. கர்நாடக மாநிலத்தில் 1972ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேவராஜ் அர்ஸ் வென்று முதல்வராக பொறுப்பேற்றார். இவர் பல்வேறு சிக்கல்களை முறியடித்து, 1977ல் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தார். இதையடுத்து பதவியேற்ற தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, கே.ஹெச்.பாட்டீல், எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தவில்லை.

ஆனால் 2013ஆம் மே மாதம் 13ம் தேதி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றது முதல் 2018 மே வரை எந்த சிக்கலுமின்றி 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்து, 40 ஆண்டுகள் இல்லாத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி, சாதனை படைத்துள்ளார் சித்தராமையா.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தான் விருப்பம் இன்றியே போட்டியிட்டதாக தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே ஒப்புதல் அளித்துள்ளார் சித்தராமையா. பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்களில் விளையாடி ஸ்கோர் செய்தது என  சாகசங்களுக்கு பிறகும் சித்தராமையாவால் இம்முறை வெற்றிபெற முடியவில்லை.