source: NS7.tv
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. அதில், அதிமுக எம்.பி தம்பிதுரை மிக ஆவேசமாக பேசி பரபரப்பை கிளப்பினார். இடைக்கால பட்ஜெட் குறித்தும் பாஜக அரசு குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்து தம்பிதுரை பேசினார். அவர் பேசியவதாவது,
➤“இடைக்கால பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது; இடைக்கால பட்ஜெட்டில் பெரிய சலுகைகளை அறிவித்திருக்கக் கூடாது!”
➤“45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!”
➤“பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது!”
➤“நாட்டின் உணவு உற்பத்தி அதிகரித்த நிலையிலும், வறுமை நீங்கவில்லை!”
➤“ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும்?; ரூ. 6,000-க்கு பதிலாக ரூ.12,000 தருவதாக அறிவித்திருக்க வேண்டும்!”
➤“சீன பட்டாசுகளின் வரவால் சிவகாசி பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது; மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கி இருந்தாலும், சீன பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ளன!”
➤“தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகள் தரமாக உள்ளனவா?; அந்த கழிவறைகள் பெண்கள் அணுகமுடியாத அளவே உள்ளன!”
➤“மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்துக் கொள்வதில் காங்கிரஸ், பாஜக இடையே வேறுபாடு இல்லை!”
➤“தானே, வர்தா, ஓகி என பல்வேறு புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; சுமார் 10000 கோடி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டியுள்ளது!”
➤“நம்பிக்கை வாக்கெடுப்புகளில் பலமுறை அரசுக்கு நம்பிக்கை அளித்தோம். ஆனால் அரசு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை!”
➤“மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?”
என கேள்வி எழுப்பி தனது உரையை நிறைவு செய்தார். தம்பிதுரை பேசிக்கொண்டிருந்தபோது பாஜக எம்பிக்கள் தம்பிதுரைக்கு எதிராக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.