வியாழன், 26 மார்ச், 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்? புள்ளிவிவர ரிப்போர்ட் மார்ச் மாதம் 1ம் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் நபர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். அவர்களை அறிந்து மருத்துவ மேற்பார்வை செய்யும் பணி தீவிரம்...

coronavirus COVID19 outbreak total number of cases reported in Tamil Nadu : தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது வரையில் இந்நோய்க்கு தமிழகத்தில் 26 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முற்றிலும் குணமடைந்து தற்போது நலமாக உள்ளார். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் எத்தனை நபர்களுக்கு இந்நோயின் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறது இந்த செய்தி.
கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுதும் விழித்துக் கொண்ட தமிழக அரசு முதலில் தமிழக கேரள எல்லைகளை மூடி உத்தரவிட்டது. அவசிய தேவைகள் இன்றி எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே  வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தது. மேலும் டீக்கடைகள், ஸ்விக்கி சேவைகள் ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்திய அரசு விதித்திருக்கும் ஊரடங்கு உத்தரவிற்கு தமிழக மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

சென்னை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆறு பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர்,மற்றும்  தனியார் மருத்துவமனையில் இரண்டு நபர்கள் என்று சென்னையில் மட்டும் மொத்தம் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு

சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது ஈரோடு மாவட்டம்.  பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனோவால்  பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதர மாவட்டங்கள்

கோவையில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வாலாஜாபாத், நெல்லை, மதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த ஒருவர்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கோடிமுனை பகுதியை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 3ம் தேதி அன்று குவைத்தில் இருந்து திரும்பி வந்த அவருக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது. அவரின் இரத்தம் மற்றும் சளி மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பிற்கான காரணம் இனி தான் தெரிய வரும்.

மார்ச் 1ம் தேதிக்கு மேல் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம்



மார்ச் மாதம் 1ம் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் நபர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். அவர்களை அறிந்து மருத்துவ மேற்பார்வை செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 15,492 நபர்கள் மாநில அரசின் நேரடி மருத்துவ கண்காணிப்பிற்கு கீழ் அவர்களின் வீட்டிலேயே குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 890 நபர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 757 எதிர்மறை முடிவுகளை தந்துள்ளது.