கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறியுள்ளது. ஊரடங்கை தாண்டி மருத்துவரீதியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க, மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. தமிழக அரசு அதையும் தாண்டி சில கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 530 மருத்துவர்கள், 1,508 Lab Technician-கள் மற்றும் 1000 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணி ஆணை கிடைக்கப் பெற்றவர்கள் 3 தினங்களுக்குள் பணியில் சேர வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், அவசர உதவி தேவைப்படுவோரை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, புதிதாக 200 Ambulance வாகனங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தகட்டமாக, கொரனாவிற்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் போதாது என்பதால், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும், 25 சதவீதம் படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தாத மருத்துவமனைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இதேபோல், அவசர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் செயறகை சுவாசக் கருவியான வெண்டிலேட்டர்கள் வாங்கவும், தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசின் இதுபோன்ற வேகமான நடவடிக்கைகள், மக்களிடம் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv