புதன், 25 மார்ச், 2020

#FactCheck | கொரோனா பாதிப்பு - இத்தாலி பிரதமர் அழுதது உண்மையா?




Image
இத்தாலியில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு பிரதமர் கண்ணீர் விட்டு அழுததாக தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. மிகவும் உணர்ச்சிகரமான இந்த பதிவு உண்மை தானா? உண்மை நிலவரம் என்ன?
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் 17,000 பேருக்கு மேல் பலிவாங்கிய கொரோனா வைரஸுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.
சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. அங்கு இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்ட நிலையில் 63,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவினால் இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைந்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு மரண ஓலம் எங்கும் கேட்பதாகவும், இந்த நிலையை அறிந்த இத்தாலி பிரதமர் கதறி அழுததாகவும், மேலும் பல தகவல்களை குறிப்பிட்டு வாட்ஸாப்பில் ஒரு தகவல் உலா வருகிறது. 
மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் இது போன்ற பதிவுகள் உண்மையானதா என்பது குறித்து தெளிவுபடுத்தவே அது குறித்த தகவல்களை ஆராய்ந்தோம். அந்த வாட்ஸாப் தகவலில் இடம்பெற்றிருந்தவர் உண்மையில் இத்தாலி பிரதமரே கிடையாது, அவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சாரோ, கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய புகைப்படத்தை தற்போது கொரோனாவுடன் இணைத்து தகவல்கள் பரப்பப்படுகிறது.
இத்தாலியின் பிரதமர் கியூசிபே காண்டே கொரோனா தொடர்பான எந்த பேட்டியிலும் அழுததாக தகவல் இதுவரை இல்லை!
கொரோனாவை விட வேகமாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இது போன்ற தகவல்களை பரப்புவது சட்ட விரோதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திவிடும் என்பதை மக்கள் உணரவேண்டும்!
credit ns7.tv