சனி, 21 மார்ச், 2020

இந்திராவின் தோல்வி இந்தியாவிற்கு சொன்ன செய்தி என்ன? March 20, 2020

Image
யார் சர்வாதிகார போக்குடன் நடந்தாலும், மக்கள் அவர்களுக்கு தோல்வியையே பரிசளிப்பார்கள் என உலகம் உணர்ந்த தினம் இன்று.
1977ம் ஆண்டு இதே நாள் தான், உலகத்திற்கே ஜனநாயகம் குறித்து இந்தியா பாடம் எடுத்த நாள். யார் சர்வாதிகார போக்குடன் நடந்தாலும், மக்கள் அவர்களுக்கு தோல்வியையே பரிசளிப்பார்கள் என உலகம் உணர்ந்த தினம்.
2019 மக்களவை தேர்தலில் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் நேரு குடும்பத்திற்கும் காங்கிரசிற்கும் அந்த அதிர்ச்சி புதியதல்ல. 1977ம் ஆண்டிலேயே அது போன்றதொரு அதிர்ச்சியை ராகுலின் பாட்டி இந்திராவிற்கு ரேபரேலி தொகுதி மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அதுவும் பிரதமராக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருந்தார் இந்திரா காந்தி. அதற்கு காரணமாக அமைந்தது ஒரே ஒரு வார்த்தை எமர்ஜென்சி. அந்த வார்த்தையினால் இந்தியா அடைந்த துயரங்கள் தான் இந்திராவிற்கு துயரமான தோல்வியை பரிசளித்தது. ஜனதா கட்சி வேட்பாளர் ராஜ்நாராயணனிடம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் இந்திரா. 
அந்த ராஜ் நாராயணன் தான் 1971 தேர்தலில் இந்திரா வென்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அலகபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு தான் இந்திரா நெருக்கடி நிலையை அமல்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. உண்மையில் நெருக்கடி நிலைக் காலத்தில் சாமனியர்களுக்கு சாதகமான சில விஷயங்கள் நடந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இந்திராவும், காங்கிரசும் தோல்வியடைந்தனர். 
ஜனநாயகத்தின் விழுமியங்கள் மீது நம்பிக்கையுள்ள இந்தியர்கள் எந்த வகையான சர்வாதிகாரத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே இந்திராவின் தோல்வி இந்தியாவிற்கு சொன்ன செய்தி
credit ns7.tv