புதன், 18 மார்ச், 2020

தமிழக எம்.பிக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ராகுல் காந்தி..! March 17, 2020

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க்களுக்கு, துணை கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக எம்.பி.,க்களை மக்களவை சபாநாயகர் அவமானப்படுத்தி விட்டதாகவும், தமிழ் மொழி தொடர்பாக அவர்கள் துணை கேள்வி எழுப்ப முயன்றபோது, அதற்கு அனுமதி வழங்கப்படாதது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமானப்படுத்தும் செயல் என்றும், ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள உரிமையை மறுக்கும் நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
தமிழ் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்றும் தமிழக எம்.பி.,க்களின் உணர்வில் கலந்துள்ள மொழி என்றும் கூறினார். ஆனால் தமிழக எம்.பிக்களை பேச அனுமதிக்காதது தமிழ் மொழி மீதான தாக்குதல் என்றும், அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்த ராகுல் காந்தி, இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தற்போது நிலையில் விவாதங்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
TR Balu
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், தமிழ் மொழி ஆட்சி விவகாரம் தொடர்பாக முன்னதாகவே நோட்டீஸ் அளித்தும் துணை கேள்வி கேட்க, சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்றும், எனவே அவரது முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்ததாகவும் அதற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது என்றார்.
credit ns7.tv, ANI