திங்கள், 23 மார்ச், 2020

தமிழகத்தில் நாளை முதல் 144 அமல்.. என்னென்ன சேவைகள் முடங்கும்?


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, கீழ்காணும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.2. பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும் , வணிக வளாகங்களும் இயங்காது.

3. அத்தியாவசிய த்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

4. தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும் அத்தியாவசிய பணிகளையும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனஙக்ள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்

5. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதி

6. அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை

7. வீடுகளில் இல்லாமல், விடுதிஅக்ள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

இது போன்ற நடவடிக்கைகள் கடுமையான தொற்று நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தடை உத்தரவால், கர்ப்பிணி, முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களான உணவுபொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் தடை இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
news 18 tamil nadu