இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் யூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 563 இந்தியர்கள் 43 வெளிநாட்டினர் உள்பட 606 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக் காட்டியதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லுவ் அகர்வால் தெரிவித்தார்.
சமூக பரவல் நிலை என்பது, பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களும், தொற்று உள்ள நாடுகளுக்குச் செல்லாதவர்களும், பாதிக்கப்படும் நிலையாகும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு, தொற்று எங்கிருந்து உருவானது என்பதையே கண்டறிய முடியாத அபாயமான நிலையாக, இது கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த நிலைக்கு இன்னும் வரவில்லை என்று லுவ் அகர்வால் தெரிவித்தார்.
credit ns7.tv