சனி, 28 மார்ச், 2020

இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள்..

தினமும் காலையில் வழக்கமாகத் தூக்கம் எழும்பும் நேரத்தில் இப்பொழுதும் எழுந்து விடுங்கள். இல்லை எங்கும் போக முடியாதே அதனால் அதிக நேரம் தூங்கி நேரத்தைப் போக்குவோம் என நினைத்து அதிக நேரம் தூங்கினால், அது உங்கள் உடலுக்கு ஒத்துவராமல் உடல் சோர்வடைந்து எதுவும் செய்ய முடியாமல் சோம்பேறியாகி விடுவீர்கள்.
2. வழக்கமாக காலையில் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதற்காக உங்கள் வேலைகளை மிக அவசர அவசரமாகச் செய்வீர்கள். இப்பொழுது அந்த அவசரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் அவசரமின்றி நிதானமாகச் செய்யுங்கள். கூடவே வீட்டில் உங்கள் வேலைகளைச் செய்வதற்கு இதுவரை யார் உங்களுக்கு உதவியாக இருந்தார்களோ, இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருங்கள். அப்பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
3. வீட்டிலிருந்து வெளியே வேலைக்குச் செல்லும் போது அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். அதைப்போன்று இப்பொழுதும் அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுங்கள். வீட்டில் தானே இருக்கிறோம் எப்போதாவது சாப்பிடலாம் என்றும் நினைக்காதீர்கள் அல்லது நேரம் காலம் பார்க்காமல் எப்பொழுதுமே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள் அதுவும் உங்கள் உடலுக்கு கொரோனாவை விடப் பெரும் தீங்கை உருவாக்கி விடும்.
4. தயவு செய்து இதுதான் டி.வி. பார்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு என நினைத்து முழு நேரமும் அதன் முன்பு அமர்ந்து விடாதீர்கள். ஏனென்றால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் கொடுமையை விட நமது டி.வி. சானல்களும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களும் தரும் செய்திகள் தான் மக்களை பெருமளவில் பயமுறுத்திப் பீதியடையச் செய்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் கொரோனா வைரஸ் பற்றி இவைகளில் வரும் தகவல்கள் அல்லது செய்திகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை என்பதே உண்மை. இவற்றிற்குப் பதிலாக கண்டிப்பாக ஒன்றோ, இரண்டோ பத்திரிகைகளை வாங்கிப் படியுங்கள் அவை உங்களுக்கு ஓரளவிற்கு உண்மையானத் தகவல்களைத் தரும். கூடவே எவ்விதமான அச்சத்தையும் ஏற்படுத்தாது.
5. இதை ஓர் அரியச் சந்தர்ப்பமாகக் கருதி நீங்கள் பள்ளியில் படித்த போது உங்கள் நண்பர்களிடம் எழுதி வாங்கிய ஆட்டோகிராப் அல்லது நீங்கள் எழுதிய டையரி எங்கோ ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக உங்கள் பார்வையில் படாமல் ஒழிந்திருக்கும். அதை தேடிப்பிடித்து, தூசுத் தட்டிக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அதற்குள்ளே எவ்வளவோ அற்புதமானத் தகவல்கள் புதைந்திருக்கும். ஒரு வேளைப் படிக்கப்படிக்கப் பெரும் ஆனந்தத்தைத் தரும். அதோடு அந்த ஆட்டோகிராப்பில் உங்கள் நண்பர்களின் டெலிபோன் எண் இருந்தால் அதில் அவர்களை அழைத்துப் பேசுங்கள். பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இதைவிட உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் அமையாது.
6. திருமணம் ஆனவர்கள், உங்கள் திருமணத்திற்கு எடுத்த வீடியோ மற்றும் போட்டோ ஆல்பம் இரண்டையும் தேடிப்பிடித்து எடுங்கள். இவை இரண்டையும் திருமணம் முடிந்த நேரத்தில் ஒன்றோ இரண்டோ முறை பார்த்திருப்பீர்கள். அதோடு சலித்துப் போய் எங்கோ ஒரு மூலையில் முடக்கி வைத்திருப்பீர்கள். இப்பொழுது அந்த ஆல்பத்தை உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்திருந்துப் புரட்டிப் பாருங்கள். ஆஹா… பழைய நினைவுகள் எல்லாம் எப்படி உங்கள் கண்முன் நிழலாடும் என்பது அப்பொழுதுப் புரியும்.
அதைப் போன்றே அந்த வீடியோவைக் குடும்பத்துடன் இருந்துப் போட்டுப் பாருங்கள். பல மணிநேரம் உங்களை அறியாமலே போகும். அதோடி ஒரு சினிமா தீயேட்டரில் இருந்து ஒரு குடும்பப் படம் பார்த்ததுப் போன்ற உணர்வு வரும்.
7. உங்களுக்குள்ளே எத்தனையோ தனித்திறமைகள் புதைந்து கிடக்கலாம். அதாவது கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது இப்படி எத்தனை எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் இருக்கலாம் அவற்றையெல்லாம் நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள். மட்டுமின்றி ஆர்வமிருந்தால் உங்கள் குழந்தைகளுக்குக் கூட அவற்றையெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கலாம்.
8. காலையிலோ அல்லது மாலையிலோ கொஞ்சம் நேரம் உங்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு பழைய காலத்து அல்லது இந்த காலத்தில் விளையாடக் கூடிய விளையாட்டுகளைக் குடும்பத்துடன் சேர்ந்திருந்து விளையாடிப்பாருங்கள். அப்பப்ப… என்னா ஆனந்தம்… பல மணிநேரம் போறதே தெரியாம விளையாடலாம்.
9. இன்றைக்கு நம்மிடையே பிரபலமாகிக் கொண்டிருப்பது யோகா என்னும் அற்புதமாக மன அழுத்தப் போக்கி. இதை மட்டும் தினமும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் செய்து பாருங்கள் எந்தக் கொரோனாவும் உங்களை அண்டவே அண்டாது.
10. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மிக முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன் தயவு செய்து இதை அப்படியே உங்க குழந்தைகளுகுச் சொல்லிக் கொடுங்கள். உங்களின் குடும்பம், அதன் வரலாறு, குடும்ப உறுப்பினர்கள் பற்றியத் தகவல்கள், யார் யார் எங்கெங்கு இருக்கிறார்கள், என்னென்ன நிலையில் இருக்கிறார்கள், நீங்கள் இளமைப் பருவத்தில் என்னென்னச் சூழ்நிலைகளையெல்லாம் சந்தித்திருக்கிறீர்கள், என்னென்ன சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் எடுத்துக் கூறுங்கள்.
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் செய்வதற்குத் தவறக்கூடிய ஒரு மிகப்பெரிய விஷயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரியச் சந்தர்ப்பம் என்றே இதைக் கருதுங்கள்.
இவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வந்தால் 21 நாள் அல்ல எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டுக்குள்ளே பேரானந்தோடு இருந்து விடலாம்.
எந்த கொரோனா வைரசும் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
credit indianexpress.com