வெள்ளி, 20 மார்ச், 2020

தூக்கிலிடப்பட்டனர் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்! March 20, 2020

Image
நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2012-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசியது. நாட்டையே கொந்தளிக்க செய்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டான்.

ராம் சிங், முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் சர்மா, அகஷய் குமார் சிங், ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் குற்றவாளி ராம் சிங் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீதம் உள்ள நான்கு பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால், சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து, தூக்குத்தண்டனை நிறுத்திவைக்ககோரி குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரையும் நாளை காலை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இதற்கான நடவடிக்கைகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. 

குற்றவாளிகளை தூக்கிலிடப்போகும் ஹேங்க் மேன் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு திகார் சிறைக்குள்ளேயே தங்கும் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார், தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்றும், இதனால் சிறார் சட்டப்படி தண்டனை விதித்து தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மறுஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த மனு ஏற்க கூடியது இல்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனாலும் தொடந்து தூக்குதண்டனையை தள்ளிப்போட குற்றவாளிகள் தரப்பில் கடும் முயற்சி செய்யப்பட்டது. குற்றவாளி முகேஷ் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற சிபிஐ போன்ற விசாரணை அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

சட்டப்பூர்வமான அனைத்து நடைமுறைகளும், முடிந்த பின்னர் எப்படி இது போன்ற கோரிக்கையுடனான மனு தாக்கல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இனி இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது என கூறி தள்ளுபடி செய்தது. குற்றாவாளிகள் தரப்பு இத்தோடு ஓய்ந்துவிடாமல் நேற்று இரவு முழுவதும் தண்டனையிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொண்டனர். நள்ளிரவில் அடுத்தடுத்து நீதிமன்ற கதவுகளை அவர்கள் தட்டினர். முதல்கட்டமாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அவர்கள் அணுகினர். தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் 4 பேரில் மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என கூறி அதனை  தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவைக் கேட்ட நிர்பயாவின் பெற்றோர்களும் அவர்களது தரப்பு வழக்கறிஞர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக நிர்பயாவின் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இதையடுத்து நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் உச்சநீதிமன்றத்தை நாடினார். பவன்குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவில் தொடங்கியது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு சில மணி நேரங்களே இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் என்ன உத்தரவிடப்போகிறது என்கிற பரபரப்பு குற்றவாளிகள் 4 பேர் தரப்பிலும், நிர்பயாவின் பெற்றோரிடமும் காணப்பட்டது. இதையடுத்து பவன்குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து 4 பேரின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்படுவது உறுதியானது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக குற்றவாளி அக்ஷய்குமாரை அவரது குடும்பத்தினர் 10 நிமிடம் சந்திக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் சிறைவிதிகளில் அதற்கு இடமில்லை என டெல்லி திஹார் சிறைநிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி காலை 5.30 மணிக்கு டெல்லி திஹார் சிறையில் நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் சர்மா, அகஷய் குமார் சிங், ஆகிய 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.
credit ns7.tv