உலக நாடுகளை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. எனினும், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல செயல்பட்டன. சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ரத்தானதால், வெளியூர் போக முடியாத பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மக்கள் ஊரடங்கு காரணமாக சென்னை சாலைகளில் பெருமளவில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், ஆங்காங்கே உள்ள பெட்ரோல் நிலையங்கள் மட்டும், வழக்கம்போல செயல்பட்டன. இருந்தும் எரிபொருள் நிரப்ப யாரும் வரவில்லை என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் சாலைகள் எங்கெங்கும் அமைதியாக தென்பட்டது. எப்போதும் வாகன இரைச்சலால் அலறும் சென்னை இன்று பறவைகளின் சத்தத்தால் நிறைந்து இருந்தது.
இதனிடையே, சென்னையில் உள்ள ஆர்.கே.சாலையில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி நேரத்தை செலவிட்டனர். கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களின் செயல் குறித்த விமர்சனமும் எழுந்த நிலையில், காவல்துறை வருவதை அறிந்ததும் இளைஞர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தனர்.
credit ns7.tv