கொரோனா பரவலை தடுக்கும்விதமாக நாளை நடைபெறும் சுய ஊரடங்கின்போது அரசு பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர்களிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, கொரோனா பரவலை தடுக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்பதால் அதனை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நேற்று முன் தினம் அறிவுறுத்திய 9 அம்ச நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார். நாளை நடைபெற உள்ள சுய ஊரடங்கின்போது காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள், மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன்னலம் கருதாமல் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றுபவர்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கூறியபடி மணியோசை மூலமும், கைதட்டியும் பொதுமக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று முதல் வரும் 31ந்தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் மூடப்படுவதாகக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்
credit ns7.tv