Rajinikanth : ரஜினி ரசிகர்களுக்கு அவதூறு பேசுவதைத் தவிர, வேறு எதுவும் தெரியாதா என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், 12 – 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் கட்டநிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் கடந்த சனிக்கிழமை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தத் தகவல் உண்மைக்கு புறம்பாக இருப்பதாகக் கூறி அந்த வீடியோவை ட்விட்டர் தளம் நீக்கி விட்டது. மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான் பேசியதிற்கான லிங்க்கையும் ரஜினி இணைத்திருந்தார். அந்த ட்வீட்டையும் ட்விட்டர் தளம் நீக்கி விட்டது. இதனால் சோகமான ரஜினி ரசிகர்கள் ட்விட்டருக்கு எதிரான கருத்துகளை ஹேஷ் டேக்காக பதிவிட்டு வந்தனர்.
“ரஜினி சாரின் வீடியோவை ட்விட்டர் மிக வேகமாக எடுத்துள்ளது. போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் மிக வேகமாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி. ட்விட்டருக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்த மாதிரியான சோதனை நேரங்களில், செல்வாக்குள்ளவர்கள் மக்களுக்கு கருத்துகளை தெரிவிப்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
இதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் பிரதீப்பை தகாத வார்த்தைகளால் இம்சிக்க தொடங்கினர். ”தவறை தவறு என்று சொன்னதற்காக இவ்வளவு அவதூறுகள். இப்போது என்னை திமுக நபராக முத்திரை குத்தி, எனது மதத்தை குறிவைத்து தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள். ரஜினியை பின்பற்றுபவர்களில் “சிலருக்கு” துஷ்பிரயோகம் மட்டுமே செய்ய தெரியும். ரஜினி தனது சீடர்களுக்கு கற்பிக்க வேண்டிய முதல் விஷயம் சகிப்புத்தன்மை. அவர் செய்வாரா? அவர்கள் நன்மையை விட அதிக தீங்கு செய்கிறார்கள்” என்று பின்னர் வேறொரு பதிவிட்டிருந்தார்.
credit indianexpress.com