வெள்ளி, 20 மார்ச், 2020

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக மாறியுள்ளது இத்தாலி!

கொரோனா கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணிய வைரஸ் மனிதர்கள் மீது தொடுத்து வரும் போரால் ஒட்டு மொத்த உலகமும் ஸ்தம்பித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் முடங்கிய சீனா இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பெரும் சுகாதார யுத்தத்தை முன்னெடுத்துள்ளன. அரேபியா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன. 
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஒரு நெருக்கடியான சூழலை உலகம் சந்தித்து வருகிறது. நிலைமை எல்லை மீறி சென்றதால், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெய்ன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ராணுவத்தை களமிறக்கியுள்ளன. ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் ஆடி போயுள்ளது.
கொரோனா குறித்த எச்சரிக்கையை ஐரோப்பா அலட்சியப்படுத்தியதன் விளைவு, உலகின் மிகச்சிறந்த சுகாதாரத்தை கொண்ட இந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ்.
கொரோனாவால் சீனாவுக்கு அடுத்தபடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இத்தாலியில் ஒரு இறுதி அஞ்சலி நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் முதியவர்களை கைவிட்டு இளைஞர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளித்து வருகிறது இத்தாலி.
அதிவேகமாக பரவி வரும் இந்த வைரசால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்கள் விற்பனைக்கு தடை என ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது இத்தாலி. நாட்டின் பிரதான நகரங்களின் முக்கிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடியுள்ளன. வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் கைகளை தட்டியும், ஆரவாரம் செய்தும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட கடுமையாக முயற்சித்து வருகின்றனர். 
ஆனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது சீனா. கொரொனாவுக்கு எதிராக அந்நாடு தொடுத்து வரும் சுகாதாரப்போரின் முக்கிய திருப்பமாக இது அமைந்துள்ளது.
credit ns7.tv