ஞாயிறு, 29 மார்ச், 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்று வந்த, கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 
இதேபோல, பிரிட்டனில் இருந்து வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன்முலம், தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் 2,09,284 பேரிடம் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1,500 பேரிடம் கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,252 க்கு பாதிப்பு இல்லை எனவும், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 208 பேரின் முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
credit ns7.tv