நடுக்கடலில் சிக்கித்வித்த கொரோனா தாக்கிய வெளிநாட்டு பயணிகளுக்கு கியூபா அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
அச்சறுத்தும் கொரோனாவால், ஒவ்வொரு நாடும் உலக நாடுகளில் இருந்து தங்களை தனிமைபடுத்தி கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று அறிகுறியுள்ள வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அனைத்து நாடுகளும் தடை விதித்துள்ளது. சில நாடுகளில், கொரோனா பாதித்த சொந்த நாட்டு மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கியூபா மட்டும் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு தஞ்சமளித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால், அனைத்து நாடுகளும் கைவிரித்து விட்டன. இதனால், நடுக்கடலில், நடுங்கிக்கொண்டிருந்த சொகுசு கப்பலுக்கு, கியூபா அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய பயணிகளுக்கு தாங்களே சிகிச்சை அளிக்க கியூபா அரசு முன் வந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதித்த மக்களை ஏற்க முன்வராத போது, கியூபா மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? கியூபாவின் மருத்து கட்டமைப்பு அவ்வளவு வலுவானதா என்பதை அறிய வேண்டியுள்ளது.
1959ம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த படிஸ்டாவின் சுறண்டல் ஆட்சியை பிடல் கேஸ்ட்ரோவும், சேகுவேராவும் புரட்சி முலம் வீழ்த்தினர். பின்னர், கியூபாவின் அதிபரான ஃபிடல் கேஸ்ட்ரோ, மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நிறுவ விரும்பினார். மருத்துவ சேவை இல்லாத பகுதிகளில் மருத்துவ சேவை வழங்குவது கேஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கேஸ்ட்ரோவின் இந்த கனவை நனவாக்க, மருத்துவரான, அவரது சக போராளி சேகுவேரா பல திட்டங்களை கொண்டுவந்தார். அதன் ஒருபகுதியாக, கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மருத்துவர்கள், கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்ய வேண்டும். அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்பட வேண்டும். இந்த மருத்துவப் பிரிவு மருத்துவப் புரட்சி படை என்று அழைக்கப்பட்டது.

மருந்துகளின் விலை குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவ கல்வியை பரவலாக்கியது என பல திட்டங்களை முன்னெடுத்தார் ஃபிடல் கேஸ்ட்ரோ. இதனால், மற்ற நாடுகளை விட மருத்துவ சேவையை விசாலமான சிந்தனைகொண்டு கியூப அரசால் செயல்பட முடிகிறது. அதன் வெளிப்பாடே, கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க கியூபா முன் வந்துள்ளது.

முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள பல வல்லரசு நாடுகள், கொரோனாவை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கம்யூனிச சிந்தனையால் ஆட்சி செய்யப்பட்டு வரும் கியூபாவில், இதுவரை கொரோனாவால் 4 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முன்வந்துள்ளது.
credit ns7.tv