திங்கள், 23 மார்ச், 2020

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு பரிந்துரை.! March 23, 2020

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களை மார்ச் 31ம் தேதி வரை முடக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 10 மாவட்டங்கள், மகாராஷ்டிராவில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்லியில் 8 மாவட்டங்களையும் முடக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலானவை மாநிலங்களின் தலைநகரங்களாகவும், முக்கிய நகரங்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, விசாகபட்டினம், லக்னோ போன்ற முக்கிய நகரங்களையும் முடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 75 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்குமாறும், ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
கத்திப்பாரா பாலம்
கொரோனா பாதிப்பு காரணமாக முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எல்லைகள் மூடி, பிற மாவட்டங்களில் இருந்து இந்த மூன்று மாவட்டங்களுக்குள் மக்கள் நுழைவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், எல்லைகளை மூடுவது குறித்த இறுதி முடிவை அந்நந்த மாநிலங்களே எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
credit ns7.tv