வியாழன், 19 மார்ச், 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!

Covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் என பாரபட்சமில்லாமல் உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை உலக அளவில் 1.98 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது, அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8,000ஐ நெருங்கியுள்ளது.
பொருளாதார, சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவாக மகராஷ்டிர மாநிலத்தில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள புனே நகரில் மட்டும் 18 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
இதே போல கேரளாவில் 27 பேருக்கும், டெல்லியில் 10 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 16 பேருக்கும் கர்நாடகாவில் 11 பேருக்கும், லடாக்கில் 8 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
credit ns7.tv, ANI