புதன், 25 மார்ச், 2020

ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் என்னை போருக்கு அனுப்பாதீர்கள் - பிரதமருக்கு மருத்துவர் வேண்டுகோள்!

Dr Kamna Kakkar asks prime minister to provide personal protective equipment : உலகம் முழுவதும் தீவிரம் காட்டும் கொரோனாவுக்கு மருத்துவர்கள் பலரும் பலியாகி வரும் சோகங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. முதன்முதலாக இந்த நோயை கண்டறிந்த சீன டாக்டர் லீ வோன்லியாங்க் இந்த நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி பல மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது அவர்களுக்கு பெரும் ஆபத்தினை வரவழைக்க கூடியதாகும்.

மருத்துவ மனை ஊழியர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்புக் கவசங்களை வழங்குங்கள். ஆயுதங்கள் ஏதுமின்றி என்னை போருக்கு அனுப்பாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மருத்துவர் கம்னா காக்கர். என்95 முகக் கவசங்கள் மற்றும் ஹஸ்மாத் சூட்கள் (Hazmat Suits) ஆகியவற்றை உடனே இந்திய மருத்துவர்களுக்கு தர ஏற்பாடு செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சிலர் பாத்திரங்களை தட்டுவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல்படுங்கள். மருத்துவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
இவருடைய இந்த ட்வீட் வைரலாகவும், கட்சிக்காக பேசுகிறார் என்பது போன்ற பதில் கருத்துகளும் வந்துள்ளது. இந்நிலையில் “நான் ஒரு மருத்துவர். மற்ற எந்த கட்சியின் அல்லது மதத்தின் கருத்துகளை நான் ஆமோதித்து இங்கே பேசவில்லை. உங்களின் தேவைக்காக என்னுடைய கருத்தினை திரிக்க வேண்டாம். நான் என்னுடன் வேலை பார்க்கும் இதர மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்காகவே பேசியுள்ளேன் என்றும் அறிவித்துள்ளார்.