African mountain gorillas, the endangered primates could die from coronavirus : உலக நாடுகளில் இருக்கும் மக்கள் அனைவரும் கொரோனாவால் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, இருக்கும் மனிதர்களை தனிப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது உலக சுகாதார மையம்.
காங்கோவில் இருக்கும் விருங்கா தேசிய பூங்காவில் (Virunga National Park in Congo) , உலகில் வாழும் மலை கொரில்லாக்களில் மூன்றில் ஒரு பங்கு கொரில்லாக்கள் உயிர் வாழ்ந்து வருகிறது. விருங்கா தேசிய பூங்கா 1925ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் முதல் தேசிய பூங்காவாக உருவெடுத்தது. யுனெஸ்கோவின் புராதான இடங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
மனிதர்களின் பண்பை அப்படியே ஒத்திருப்பவை தான் கொரில்லாக்கள். மனிதர்கள் அதிக அளவில் இந்த நோய்க்கு ஆளானால் கொரில்லாக்களுக்கும் இந்நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலை நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் தொடர்ந்து கொரில்லாக்களின் எண்ணிக்கை குறையத் துவங்கிய பின்னர் 1996ம் ஆண்டு அழிவு நிலையில் இருக்கும் விலங்கு என்று அறிவிக்கப்பட்டது.
வேர்ல்ட் வைட் ஃப்ண்ட்டின் அறிக்கைப்படி, ஒரு சாதாரண காய்ச்சல் கூட மலை கொரில்லாவை கொன்றுவிடக் கூடியது. அதனால் தான் கொரில்லாவை பார்க்க வரும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக இடைவெளி இருக்கும்மாறு பார்த்துக் கொள்வதை வனத்துறையினர் ஒரு வேலையாகவே கொண்டுள்ளனர்.
வனவிலங்கு இயக்குநகரத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி பௌலா கஹூம்பா (Paula Kahumbu) இது குறித்து அறிவிக்கையில், மனிதர்களை தாக்கும் நோய்கள், மிக எளிதில் கொரில்லாக்களுக்கும் தொற்றிக் கொள்ளும். சாதாரண சளி, காய்ச்சலுடன் இருப்பவர்களையே நாங்கள் கொரில்லாக்களின் அருகில் செல்வதை தடுத்து வருகின்றோம். கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆனால் அறிகுறிகள் ஏதும் காட்டாமல் இருக்கும் பட்சத்தில் கொரில்லாக்களுக்கு அது மிகப்பெரும் சவாலான காரியமாக அமைந்துவிடும்.
கொரோனா நோய் தொற்று அதிகரிப்பதால் ஜூன் மாதம் வரையில் அங்கு மக்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது விருங்கா தேசிய பூங்கா. பூங்காவின் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். காங்கோ, ருவாண்டாவில் இது போன்ற முடிவுகள் மேற்கொண்ட போதிலும் உகாண்டாவில் கொரில்லா டூரிஸத்திற்கு இன்னும் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
ஏற்கனவே விளிம்பு நிலையில் இருக்கும் இந்த உயிரினங்கள், கொரோனாவால் அழியத் துவங்கினால், நம் கண் முன்னே நாமும் அழிந்து, உலகமும் அழிந்து போவதை காண நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
credit indianexpress.com