கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு டெட் டாக் (Ted Talk) நிகழ்ச்சியில் பங்குபெற்று பில்கேட்ஸ் 8 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையின்போது அடுத்த பத்தாண்டுகளில் உலகிற்கும் மனித இனத்திற்கும் பேராபத்தாக போர் இருக்காது எனவும் அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் மூலம் 1 கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் ஆற்றிய உரையில், எபோலா வைரஸ் குறித்து பேசினார். அப்போது எபோலா வைரஸை கட்டுப்பத்த தேவையான திட்டங்களும் வழிவகைகளும் இல்லை என தெரிவித்தார். ஆனாலும் சுகாதாரத்துறையினர் துல்லியமாக செயல்பட்டதாலையே அதனை கட்டுக்குள் வைக்க முடிந்தது எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டார். மேலும் எபோலா தொற்று நோயாக இருந்தாலும் அது காற்றின் மூலம் பரவவில்லை என்பதாலே உலக நாடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். ஆனால் அடுத்தமுறையும் இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறமுடியாது என்றார்.
வைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோயினால் உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் அதனை தடுக்க உலக நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கே கோடிக்கணக்கான பணத்தை உலக நாடுகள் செலவிடுவதாக கூறிய பில் கேட்ஸ், தொற்று நோயை தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தொற்று நோய் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வல்லுநர்களும் தொற்று நோயியல் நிபுணர்களும் இல்லை எனவும் பில் கேட்ஸ் கூறினார்.
இந்த தொற்று நோயினை போர் கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலே தப்பிக்க முடியும் எனக் கூறிய பில் கேட்ஸ், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறினார். 2015ம் ஆண்டில் பில் கேட்ஸ் கணித்தது தற்போது கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது என சமூக வலைதளத்தில் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதைப் பற்றி 4,839 பேர் பேசுகிறார்கள்
கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிய பில் கேட்ஸ், இனிமேல் மக்கள் நலன் சார்ந்த செயல்களில் (Philanthropy) அதிக கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் ரூ.750 கோடி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வளரும் நாடுகளையும் அதன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்றும் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை (Shut Down) பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். முழு அடைப்பை பின்பற்றினாலே ஓரளவு கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மருத்தை செயல்படுத்த இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் எனவும் ஆனாலும் அதனை உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv