வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு!

credit ns7.tv
Image
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று குணமடைந்த 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் முன்னிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உற்சாகத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்தோனேஷியாவிலிருந்து வந்த 5 பேர் உள்ளிட்ட ஒரே தொற்றை சேர்ந்த 16 பேர் குணமடைந்ததையடுத்து அவர்கள் அனைவரும், நோய் தொற்றைப் பரப்பிய வழக்கில் 16 பேரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்து வீடு திரும்பினர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த இளைஞரும், பெரம்பூர் ஜமாலியா பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
பின்னர் சிறப்பு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து கைதட்டி அவர்களை வழி அனுப்பி வைத்தனர். தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு இருவரும் கைகூப்பி நன்றி தெரிவித்தனர். இருவரையும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், 25 நாட்களுக்குப் பிறகு பூரண குணமடைந்து, வீடு திரும்பினார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைதட்டி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் 20 பேர் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் 5 பேர் குணமடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் மருத்துவர்கள் பழங்கள், மற்றும் முகக்கவசம் வழங்கி மகிழ்ச்சியுடன் கைத்தட்டி வழியனுப்பி வைத்தனர். 
இதனிடையே புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரில் ஒரு நபர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து அந்நபரை மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.