தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டை மையமாக வைத்து முஸ்லிம்கள் மீது ஊடகங்கள் வகுப்புவாத வெறுப்புணா்வைப் பரப்பி வருவதாகவும் அதற்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜமீயத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், ஊடகங்களை தடுக்க முடியாது என்று கூறியதுடன், மனுதாரர் ஜமீயத் -உலேமா-இ-ஹிந்த் அமைப்பிடம் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவையும் மனுதாரராக சேர்க்குமாறு தெரிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சில் இந்த மனுவில் மாற்றப்பட்ட பின்னர், இந்த மனுவை பின்னர் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
ஜமீயத் -உலேமா-இ-ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், டெல்லியின் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டை கொரோனா பாதிப்புக்கான களம் என்று சித்தரித்து, நாடு முழுவதும் இல்ல இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இதில், தவறான செய்திகளை வெளியிடுவதை ஊடகம் நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் நிஜாமுதீன் மாநாட்டை ஏற்பாடு செய்தார் என்று தப்லிக் ஜமாஅத் மதகுரு மௌலானா சாத் மற்றும் அமைப்பின் இதர ஏற்பாட்டாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ், கடந்த மார்ச் 31ம் தேதி டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான பங்கேற்பாளர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல, இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
“மக்களின் சில பிரிவினர்களுக்கு ஏற்படும் களங்கத்தை” எதிர்த்துப் போராட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அழைப்புக்கு இந்தியா கடுமையாக பதிலளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த மனுவுக்கு உச்சநீதிமன்றத்தின் பதில் வந்துள்ளது.
கடந்த 14 நாட்களில் நாட்டின் 15 மாநிலங்களைச் சேர்ந்த 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் 9,000 தாண்டி 9,152 ஆக உள்ளது. இதுவரை 856 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 796 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக 35 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.
கோவிட் -19 க்கு இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 6 வாரங்களுக்கு சோதனைகளை மேற்கொள்ள போதுமான அளவு அவர்களிடம் இருப்பு உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.