River Ganges water quality improved during the coronavirus lockdown : உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கூடுகைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டு விலங்குகள், பறவைகள் என பலவும் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன. வாத்துகள் மற்றும் மீன்கள் வென்ஸி நகரில் இருக்கும் ஆற்றில் சுற்றித் திரிந்தது அதற்கு ஒரு முக்கிய உதாரணமாகும்.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் நரேந்திர மோடி. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தொழிற்சாலை கழிவுகள் ஆறுகளில் கலப்பதில்லை.
கங்கை நதியில் கலக்கும் மாசில், பத்தில் ஒரு பங்கு தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்டது. 15 நாட்களாக தொழிற்சாலைகள் எதுவும் இயங்காத காரணத்தினால் கங்கையின் மாசு அளவு குறைந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதன் காரணமாக கங்கை நதியின் நிலைமையும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 14 மற்றும் 15 தேதிகளில் பெய்த மழையின் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என இந்திய தொழில்நுட்பக்கழகம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.கே. மிஷ்ரா அறிவித்துள்ளார்.
இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் கங்கைநதி முழுமையாக சுத்தம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கங்கை சுத்தமடைந்தால் அதனை நம்பி வாழும் உயிரினங்கள் அழிவில் இருந்து மீண்டு வரும் என்றும் வனஉயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடி, 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது, கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும் என்றும் அதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆனால் அவை அனைத்தும் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது என்று எதிர்கட்சிகள் அவரை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் மனிதர்களின் அதீத செயல்பாடுகள் குறைந்து வருகின்ற நேரத்தில், மனிதன் இயற்கைக்கு செய்த சீரழிவில் இருந்து தன்னை குணப்படுத்திக் கொள்கிறது இயற்கை. நீரின் மாசு குறைந்ததோடு மட்டுமில்லாமல், காற்று மாசடைதலும் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் தான் 213 கி.மீ அப்பால் இருக்கும் இமயமலையின் தௌலாதார் சிகரத்தை பஞ்சாபில் இருக்கும் ஜலந்தர் வாசிகள் பார்க்க முடிந்தது.