11-ம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்று அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தைப் பின்பற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 600 மதிப்பெண்கள் கொண்ட பாடத் தொகுப்பு அமலில் இருந்து வருகிறது. 2020- 2021ம் கல்வியாண்டு முதல், கூடுதலாக 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத் தொகுப்பும் அமலுக்கு வந்துள்ளது. மாணவர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப 600 மதிப்பெண் அல்லது 500 மதிப்பெண் கொண்ட பாடத்தொகுப்புகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நிறைய பள்ளிகள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பெண் தொகுப்பை தேர்ந்தெடுக்கவிடாமல், 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத் தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரையடுத்து, எந்த மேல்நிலைப் பள்ளிகளும், 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத் தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெறாமல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி கோரும் பள்ளிகள், அது தொடர்பான உரிய கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கு புதிய பாடத் தொகுப்புக்கான அனுமதி வழங்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.