திங்கள், 15 ஜூன், 2020

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொலை!

ஜார்ஜ் பிளாய்ட் புதைக்கப்பட்ட மண்ணில் ஈரம் காய்வதற்குள், அமெரிக்காவில் மற்றொரு கருப்பின இளைஞர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் நிகழ்ந்த இந்த கொடூரத்தால், நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை, போலீஸ் அதிகாரி ஒருவர் காருக்கு வெளியே தள்ளி, அவரின் கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து அழுத்தினார். வலியால் துடித்த ஜார்ஜ் பிளாய்ட் ''என்னை விட்டு விடுங்கள்'' என்ற கெஞ்சியும், ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசாரால், அவரின் உயிர் அங்கேயே பிரிந்தது.


கடந்த 27ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பத்தை தொடர்ந்து, நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்ட நெருப்பு, இன்று வரை அணையவில்லை. ஜார்ஜ் பிளாய்ட் புதைக்கப்பட்ட மண்ணில் ஈரம்கூட காயாத நிலையில் அமெரிக்காவில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் Rayshard Brooks என்ற 27 வயது கருப்பின இளைஞர், வெண்டிஸ் உணவகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, அதில் படுத்து தூங்கியுள்ளார். அவரது காருக்கு பின்னால் மற்ற கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், Rayshard Brooks-ஐ விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், போலீசாருடன் செல்ல மறுத்த ப்ரூக்ஸ், அங்கிருந்து தப்பியோட முயன்று இருக்கிறார். இதனால், போலீஸ் அதிகாரிகளுக்கும், கருப்பின இளைஞர் ப்ரூக்ஸ்க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Rayshard Brooks - Police 2

இதையடுத்து உடலில் பட்டதும் ஷாக் அடிக்கும் துப்பாக்கியை Rayshard Brooks மீது பயன்படுத்தி உள்ளனர் போலீஸ் அதிகாரிகள். இதில் இருந்து தப்பித்து அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார் ப்ரூக்ஸ். அவரை பின்தொடர்ந்து துரத்திய போலீஸ் அதிகாரிகள், எதை பற்றியும் யோசிக்காமல் சில மீட்டர் தூரத்திற்குள்ளேயே ப்ரூக்ஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டுகள் உடலை துளைத்ததும், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் அந்த கருப்பின இளைஞர் Rayshard Brooks.

Rayshard Brooks - Protest

காண்போரின் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி அட்லாண்டா நகர் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. கொதித்தெழுந்த பொதுமக்கள், Rayshard Brooks சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக அமைந்த வெண்டிஸ் உணவகத்தை இரவோடு, இரவாக தீ வைத்து கொளுத்தினர்.

கருப்பின இளைஞர் Rayshard Brooks-ன் மரணத்திற்கு நீதி கேட்டு, அட்லாண்டா நகர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது Rayshard Brooks-ன் மரணம் போராட்டக்காரர்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. 

Police

இதனிடையே, Rayshard Brooks சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு போலீஸ் அதிகாரி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, அட்லாண்டா காவல்துறை தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ், தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.  

Justice For Rayshard Brooks

ஜார்ஜ் பிளாய்ட், Rayshard Brooks என அடுத்தடுத்து கருப்பினத்தவர்களின் மரணத்தால், அமெரிக்காவில் பற்றி எரியும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களை, முடிவுக்கு கொண்டு வருவாரா அதிபர் டொனால்ட் டிரம்ப்.