ஒடிசாவின் மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய 60 அடி கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என பாரம்பரிய இடங்கள் குறித்த ஆவணமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் உள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சாரம் பாரம்பரிய அறக்கட்டளையின் (INTACH) திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர் இதுகுறித்து கூறுகையில், ‘கட்டாக் அருகே பத்மாவதி பகுதியில் உள்ள பைதேஸ்வர் கிராமத்தின் அருகே உள்ள நதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்தகாவின் கட்டுமான பாணியை கொண்டுள்ள இந்த கோயில் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். பாரம்பரியமிக்க இந்த கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அவர்களிடம்தான் உள்ளது’ என கூறியுள்ளார்.
இந்த திட்டத்தில் இதுவரை 65 கோயில்களை கண்டுபிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பழங்காலத்தில் இந்தப் பகுதி ‘சதாபதனா’ என அழைக்கப்பட்டதாகவும், வெள்ளத்தால் நதி அதன் பாதையை மாற்றிக் கொண்டதால் கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உள்ள தெய்வங்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது கோபிநாத் தேவ் கோயிலாகும்.
இந்த திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட 800 நினைவுச் சின்னங்கள் குறித்த அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே போல் மகாநதி பாபும் 9 மாவட்டங்களிலும் பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் நதிகளில் நிறைய கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என்றும், பல்வேறு நதிகளில் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். பழங்கால நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் அழிந்து விட்டதாகவும், சில சின்னங்கள் சிதைந்த நிலையில் கிடைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.