வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா ஊரடங்கு : 1,600 இந்தியர்களை பத்திரமாக அனுப்பிவைத்த சவுதி அரேபியா

கொரோனா ஊரடங்கு நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம், 1600 இந்தியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் தொழிலாளர்களை, விமானங்களின் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்திவந்த நிலையில், பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு நாடுகள் கடுமையான ஊரடங்கு நிலையை அமல்படுத்தியதை தொடர்ந்து அந்த நாடுகளில் வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் கடுமையான பாதிப்பு அடைந்தனர்.

சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எக்ஸ்பர்டைஸ் காண்டிராக்டிங் நிறுவனம், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை தங்களது சொந்த செலவில் 12 சார்ட்டர்ட் விமானங்களின் மூலம் அவர்களை அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், மேற்கு ஆசியாவில் அதிகளவில் தங்களது தொழிலாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை எக்ஸ்பர்டைஸ் கான்டிராக்டிங் நிறுவனம் பெற்றுள்ளது.

எக்ஸ்பர்டைஸ் நிறுவனம், 1600 இந்தியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்துள்ளது.
1600 இந்தியர்களை, 8 விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டு, இதுவரை 6 விமானங்களின் சேவைகளை இயக்கி முடித்துள்ளது.

ஜூன் 5ம் தேதி – சென்னை மற்றும் ஐதராபாத்
6ம்தேதி – அகமதாபாத் மற்றும் டெல்லி
7ம் தேதி – மங்களூரு மற்றும் சென்னை நகரங்களுக்கு விமானங்களை இயக்கியுள்ளன.

ஜூன் 10ம் தேதி கொச்சிக்கும், 11ம் தேதி மங்களூருவுக்கும் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் ஹெவிமெட்டல்ஸ் துறையில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள இந்நிறுவனத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.