வியாழன், 11 ஜூன், 2020

கொரோனாவே இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து; அசத்தி காட்டிய ஜெசிந்தா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதை தவிர வேறெந்த பாதுகாப்பு வழிமுறைகளும் நம்மிடம் இல்லை. நியூசிலாந்து நாட்டில் முதல் கொரோனா நோய் தொற்று பிப்ரவரி 28ம் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று இல்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்று கூறிய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், நாட்டின் எல்லைகளை தொடர்ந்து மூடியிருக்க உத்தரவு பிறப்பித்தார். கடைசியாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர் கடந்த 48 மணி நேரம் கொரோனா அறிகுறிகளில் இருந்து முற்றிலும் விடுதலை அடைந்துள்ளார் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் 2,94,800 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1154 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. 22 நபர்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். ஆனால் கடந்த 17 நாட்களில் எந்தவிதமான புதிய நோய் தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டவில்லை.

மற்ற நாடுகளுக்கு முன்பாகவே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது நியூசிலாந்து. மார்ச் 19ம் தேதியின் போது அந்நாட்டில் மொத்தமே 28 நபர்களுக்கு மட்டும் தான் நோய் தொற்று இருந்தது. இருப்பினும் அப்போதே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 100 பேருக்கு மேலே பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டது. எல்லைகள் மூடப்பட்டு வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது அவ்வரசு.

தேவையற்ற பொருட்களுக்கான வர்த்தகம், பள்ளிகள், பொதுநிகழ்வுகள், ஃபுட் டெலிவரி, நீச்சல் குளங்கள் என அனைத்தும் 48 மணி நேரம் கால ஒதுக்கீட்டிற்கு பிறகு முற்றிலுமாக மார்ச் 23ம் தேதி அடைக்கப்பட்டது. ஆண் ஆட்சியாளர்கள் பலரும் கொரோனா நோய் தொற்றினை பல நாடுகளில் சரியாக கையாளாத இந்த சூழலில், வெற்றிகரமாக பெண்கள் ஆட்சியும் நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் பலவும் இதற்காக ஜெசிந்தாவை பாராட்டி வருகின்றனர்.