குஜராத்தில் கிர் தேசியப்பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 28% உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உலகில் ஆசிய சிங்கங்களுக்கான ஒரே வாழ்விடமாக குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா திகழ்கிறது, ஒரு காலத்தில் அழிவின் பாதையில் இருந்தன ஆசிய சிங்கங்கள், அரசின் பல்வேறு முயற்சிகளால் தற்போது அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிங்கங்களை வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதோடு அவற்றை கொல்லும் கொடிய கெனைன் டிஸ்டெம்பர் என்ற வைரஸ் பாதிப்பை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சிங்கங்களில் எண்ணிக்கையை கணக்கிட 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிர் தேசிய பூங்காவில் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி சிங்கங்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 28.87% அதிகரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள குஜராத் கிர் தேசிய பூங்காவின் தலைமை பாதுகாவலர், இந்த ஆண்டு கணக்கெடுப்பில் சிங்கங்களின் எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இது 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இருந்த எண்ணிக்கையை விட 1.87% அதிகம் என தெரிவித்துள்ளார்.
கடந்த கணக்கெடுப்பில் 523 சிங்கங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆசிய சிங்கங்களின் வாழ்விடங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட யுக்திகள், வனவிலங்கு சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்டவையே தற்போதைய வெற்றிக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் கணக்கெடுப்பு கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது.
சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.