வெள்ளி, 19 ஜூன், 2020

பெரிய நகரங்களில் பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதிப்பு எப்படி குறைவாக உள்ளது?

புதன்கிழமை நிலவரப்படி 827 பாதிப்புகள் மற்றும் 43 இறப்புகள். 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில், பெங்களூரு மிகக் குறைந்த கோவிட் 19 பாதிப்புகளை கொண்டுள்ளது. ஆனால், மும்பையில் 60,228 பாதிப்புகள் மற்றும் 3,167 இறப்புகள் உள்ளன; டெல்லியில் 44,688 பாதிப்புகள் மற்றும் 1,837 இறப்புகள்; மற்றும் சென்னையில் 34,245 பாதிப்புகள் மற்றும் 422 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பெங்களூருவின் கோவிட்-19 தடுப்பு நிகழ்வில், வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தி, கண்காணித்து, தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் என்று பெங்களூருவில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து தொற்று நோயியல் நிபுணர்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.


வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்த, நகராட்சி மாநகராட்சியைச் சேர்ந்த சுகாதார மற்றும் குடிமை அதிகாரிகள் பகல் மற்றும் இரவு நேரங்கள் என சாத்தியமான அனைத்து நேரங்களிலும், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக் கதவை தட்டினர். அந்தளவுக்கு, அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினார்கள்.

“பெங்களூரு கட்டுப்படுத்தல் மாதிரியை நான் ஒரு வாக்கியத்தில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அது பாதிக்கப்பட்டவர்களை விரைவில் தடமறிதல் ஆகும்” என்று கோவிட் -19 க்கான ஐ.சி.எம்.ஆர் தேசிய பணிக்குழுவால் அமைக்கப்பட்ட தொற்றுநோயியல், கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர் டாக்டர் கிரிதர் ஆர் பாபு கூறினார்.

ஐ.சி.எம்.ஆர் குழு மேற்கொண்ட ஆய்வில், ஜனவரி 22 முதல் ஏப்ரல் 30 வரை, தேசிய சராசரி 20 (பாதிப்பாளரின் தொடர்புகளை கண்டறிதல்) என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-பாசிட்டிவ் பாதிப்பு கொண்ட நபரின் 93 தொடர்புகளை கர்நாடகா பரிசோதித்தது. அதே காலகட்டத்தில், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற அதிக நோய் சுமை கொண்ட மாநிலங்கள் ஒவ்வொரு கோவிட்-நேர்மறை நபருக்கும் முறையே 8 மற்றும் 9 தொடர்புகளை மட்டுமே சோதித்தது.

“மற்ற இடங்களைப் போலல்லாமல், நாங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளை institutional quarantine-க்கு மாற்றினோம்” என்று பெங்களூரு நகரத்திற்கான கோவிட் -19 போர் அறையின் (war room) பொறுப்பாளரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான  ஹெப்சிபா ராணி கூறினார்.

சோதனை-கண்காணிப்பு கொள்கையைத் தவிர, நோயின் பரவலைப் புரிந்துகொள்ள தரவின் பயனுள்ள பயன்பாட்டை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புத் தடமறிதல் முதல் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு வரையிலான செயல்பாடுகளுக்காகவும், புதிய வருகைகளைக் கண்காணிப்பதில் இருந்து சிக்கலான நோயாளிகளைக் கண்காணிப்பது வரை ஆறு ஆப்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. தரவுகளை கண்காணிக்கும் குழுக்களும், வைரஸ் பாதிப்பின் தினசரி நிலைமைகளை பகுப்பாய்வு செய்து அதிகாரிகளுக்கு உடனுக்குடன்தகவல் அளித்ததால், அவர்கள் அதற்கேற்ப செயல்பட எளிதாகிப் போனது. உதாரணமாக, கடுமையான சுவாச நோய்த்தொற்று (SARI) நோயாளிகளை இறப்புகளின் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள குழுவாக தரவுகள் அடையாளம் காணும்போது, ஆக்ஸிஜன் செறிவு அளவை சோதிக்க, அனைத்து கிளினிக்குகளிலும் pulse oximetry பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும், வைரஸ் பரவலின் ஆரம்ப கட்டங்களிலும், லாக் டவுன் காலத்திலும், பதாராயணபுரம், ஹொங்கசந்திரா மற்றும் சிவாஜிநகர் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மண்டலங்களில் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது.

“தொற்று மற்ற தெருக்களில் பரவியதா அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்புடையவர்களை ரேண்டமாக சோதனை செய்தோம். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயுற்ற நிலையில் உள்ளவர்களையும் நாங்கள் பரிசோதித்தோம், மேலும் நேர்மறை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதை உணர்ந்தோம்” என்று ராணி கூறினார்.

பிபிஎம்பியின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி கே விஜேந்திராவன், பெரிய சந்தைகளை தொடக்கத்திலேயே மூடியது, கோவிட் எண்ணிக்கையை குறைவாக உதவியது என்கிறார். “முதல் லாக் டவுன் தொடக்கத்தில் நாங்கள் பெரிய சந்தைகளை மூடிவிட்டோம். யாரும் அதை கவனிக்கவில்லை, ஆனால் இது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய படியாகும். நோய் பரவத் தொடங்கிய பின்னரே சென்னையில் (கோயம்பேடு) சந்தை மூடப்பட்டது” என்றார்.

இருப்பினும், லாக் டவுன் தளர்த்தப்பட்டதிலிருந்து, பெங்களூரில் பாதிப்புகள் உயரத் தொடங்கியுள்ளன. மார்ச் 8 முதல் மே 31 வரை பெங்களூரில் 358 பாதிப்புகள், 10 இறப்புகள் மற்றும் ஐ.சி.யூவில் 5 நோயாளிகள் மட்டுமேஇருந்தனர். ஆனால், ஜூன் 1 முதல் ஜூன் 17 வரை 469 வழக்குகள், 33 இறப்புகள் மற்றும் 36 நோயாளிகள் ஐ.சி.யுவில் உள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஜூன் 15 ம் தேதி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 17 பணிக்குழுக்களை அரசாங்கம் அமைத்தது.

லாக் டவுனுக்கு பிறகு, எங்களுக்கு SARI மற்றும் ILI (இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள்) பாதிப்புகள் அதிகம் உள்ளன. கிட்டத்தட்ட 30 சதவீதம் SARI / ILI பாதிப்பாளர்கள், பயண வரலாறு அல்லது தொடர்புகள் இல்லாதவர்கள். அறிகுறிகள் தெரியும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக அவற்றை விரைவாக அடையாளம் கண்டு சோதனைகளை மேற்கொள்ளும் ஒரு சோதனை மூலோபாயத்தை நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹெப்சிபா ராணி கூறினார்.

அடுத்த சில வாரங்களில் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக, கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் செவ்வாய்க்கிழமை புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். அவற்றில் கோவிட் மருத்துவமனைகளை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.