திங்கள், 8 ஜூன், 2020

சட்டீஸ்கரில் தடியடி நடத்திய காவலர்: மனிதாபிமானமற்ற செயல் என முதல்வர் கண்டனம்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலானதையடுத்து, இந்த சம்பவத்திற்கு சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பிர்கான் பகுதியில் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்களை காவலர் ஒருவர் குச்சியை வைத்து கடுமையாக அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறை சீருடை அணியாமல் பணியில் இருக்கும் அவர், அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் விதிமுறையை மீறி வெளியே வருபவர்கள் மீது தடியடி நடத்துகிறார். 

இதனை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது வைரலாக பரவியதையடுத்து இந்த சம்பவம் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘இது மனிதாபிமற்ற செயல். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்’ என கூறியுள்ளார்.  

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிர்கான் பகுதியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா நோயாளி ஒருவர் அந்தப் பகுதியில் உயிரிழந்ததால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். 
விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவலர் தடியடி நடத்தியுள்ளார். இருப்பினும் அவரது நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. விசாரணைக்கு பிறகு காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts: