கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் சென்னை, முழு ஊரடங்கை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை தமிழகத்தின் மொத்த பாதிப்பில் முக்கால் வாசியை தனது வசமாக்கியுள்ளது. இதற்கு சென்னையில் மக்கள் நெருக்கமாக கூடுவதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சென்னையில் மட்டும் ஊரடங்கை தீவிரமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதனிடையே சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? என்று அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேள்வியெழுப்பினர். மேலும், தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? எனவும் வினா எழுப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டால் அதனை செயல்படுத்த தயாராக இருப்பதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் அவர்கள் மனுவையும் அளித்துள்ளனர்.
இதனிடையே சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு தொடர்பான விவாதங்கள் தொடரும் நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை அளித்தால், சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து, அமைச்சரவை கூடி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.
உலகில் சில நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக முழு ஊரடங்கு இருந்துள்ளது. சென்னையும் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால், சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. அதனை ஏற்க வேண்டிய நிலையில் மக்களும் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.