கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை ஆய்வக வளாகத்துக்குள் 500 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அதி நவீன மருத்துவமனையை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் பணியாற்ற 81 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 88 தனியார் மருத்துவமனைகள் முன் வந்துள்ளதாகவும், அவைகள் குறித்த விவரங்கள் 'ஸ்டாப் கரோனா' இணையதளத்தில் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தேவையான மருத்துவர்களும் விரைவில் நியமிக்கப்படுவர் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.