திருமணமே வேண்டாம் என இளைஞர்கள் சொல்லத் தொடங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களை விட, இளம் பெண்களே காதல் திருமணத்தை அதிகம் விரும்புவதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில், 24 முதல் 39 வயதுக்குட்டோர் மற்றும், 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனநிலையை அறியும் முயற்சியில் யூகவ் - மின்ட் - சிபிஆர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டன. திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும், இளைஞர்களின் விருப்பம் குறைந்து வரும் அதிர்ச்சித் தகவல் அதில் வெளியாகி உள்ளது. 10 ஆயிரத்திற்கும் கீழே வருமானம் உள்ளவர்களில் 39 சதவீதம் திருமணமே வேண்டாம் என விரக்தி மனநிலையில் உள்ளனர். 25 ஆயிரத்திற்குள் சம்பாதிப்போரில், 25 விழுக்காட்டினரும், 60 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்களில் 21 விழுக்காட்டினரே திருமணத்தில் விருப்பமில்லை என சொல்லியுள்ளனர்.
அதே போல் 10 ஆயிரத்திற்குள் சம்பாதிப்பவர்களில் 4ல் ஒருவர் குழந்தை வேண்டாம் என்கிறார். 25 ஆயிரத்திற்குள் சம்பாதிப்போரில், 20 விழுக்காட்டினரும், 60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிப்போரில் 19 விழுக்காட்டினரும் குழந்தை வேண்டாம் என கூறியுள்ளார். அதே போல் சொந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களையும், மொழியைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்வதில் 30 விழுக்காட்டினர் விரும்புகின்றனர்.
இளைஞர்களிடையே காதல் திருமணத்திற்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. 24 - 39 வயதுக்குட்பட்டோரில் 62.3 விழுக்காட்டினர் காதல் திருமணத்தையே விரும்புகின்றனர். எஞ்சிய 37.7 விழுக்காட்டினரே நிச்சயிக்கப்பட்ட திருமணம் வேண்டும் என சொல்லியுள்ளனர். 23 வயதுக்குட்பட்டோரில், 10ல் 7 பேர் காதல் திருமணமே களிப்பூட்டும் எனக் கூறியுள்ளனர்.
காதல் திருமணத்தை விரும்பும் பெண்கள்:
ஆண்களை விட பெண்களே காதல் திருமணத்தை அதிகம் நேசிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. பெண்களில் 49 விழுக்காட்டினர் காதல் திருமணத்திற்கு ஓகே சொல்கின்றனர். அதே நேரததில் 30 விழுக்காடு பெண்கள், திருமணமே வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்களில் 41 விழுக்காட்டினரே காதல் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்களில் 32.5 விழுக்காட்டினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதாகச் சொன்னாலும், 26.5 விழுக்காட்டினர் திருமணமே வேண்டாம் என்றே சொல்கின்றனர். அதே போல், கல்விக்கும் குறைந்த வயது திருமணத்திற்கும் தொடர்பு இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10ம் வகுப்பு வரை படித்தவர்களில் 60 விழுக்காட்டினர் 30 வயதிற்குள் திருமணத்தை முடித்துவிடுகின்றனர். முதுகலை படிப்பை முடித்தவர்களில் 27 விழுக்காட்டினர், சற்று தாமதமாக 35 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் திருமணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம் என ஒரு பகுதி இளைஞர்கள் கூறியிருப்பது அதிரவைத்துள்ளது.