விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவால் உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் மேலும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இனிவரும் காலங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று தொடங்கியுள்ள 5-ம் கட்ட ஊரடங்கில், அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் பல மாநிலங்களில் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அதில் பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் விமான சேவைகளிலும் பயணிகள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் விமானத்தில் நடு இருக்கைகளை காலியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அவசியத் தேவை அடிப்படையில் நடு இருக்கைகளை காலியாக வைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நடு இருக்கையில் அமர அனுமதிக்கலாம் என்றும் நடு இருக்கை பயணிக்கு 3 அடுக்கு முகக்கவசம், பாதுகாப்பு உடை ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 25-ம் தேதிததான் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.