வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் மரணம் வரை ஷாட் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி உலக அளவில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள் வெளியாகின்றன. அவற்றில் தமிழ் வாசகர்களுக்கு தேவையான 8 முக்கிய செய்திகளைத் தொகுத்து தருகிறோம்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் புதிதாக 19 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகட்சமாக இன்று ஒரே நாளில் 1,008 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது 62வது பிறந்தநாளில் காலமானார். அவருக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தியாவிலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா அச்சுறுத்தல் பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் ராஜலட்சுமி பொறியியற் கல்லூரி மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தியது. வீடியோ காலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் பலவும் முடங்கியிருந்தாலும் ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சத்தம் ஓயவில்லை. ஜம்மு காஷ்மீரில் சுகோ பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ், கொரோனா வைரஸ் தொற்றால் இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்றும் குழந்தை பருவத்தில் மோசமான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அன்டோனியோ குட்டரெஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் ஏற்கெனவே 5 குழந்தைகளில், 1 குழந்தை ஐந்து வயதிற்குள் அவர்களின் வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் வறுமை விகிதங்கள் உயர்ந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். அதனால் ஏழை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான் கெர்கோவ், “அறிகுறி இல்லாத கொரோனாவால் ஆபத்து இல்லை. ஏனென்றால், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உள்ளவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது என்பது மிகவும் குறைவாக இருக்கும்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய மருத்துவக்கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும். கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டு வருகிறது.” தெரிவித்தார்.