சென்னை அரசு பொது மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களிடம் கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசுப் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனை(எழும்பூர்) , கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை(திருவல்லிக்கேணி) ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மட்டும் இதுவரை 523 கர்ப்பிணி பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டதாக ‘தி இந்து’நாளிதழ் செய்தி வெளியிட்டது.
“எழும்பூர் அரசுப் மகப்பேறு மருத்துவமனையில் கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் புலியாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். சைதாபேட்டைலிருந்தும் நோயாளிகள் உள்ளனர். நோயாளிகளில் குறைந்தது 20% பேருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதுவரை, கொரோனா தொற்று காரணமாக எங்களுக்கு எந்த தாய்வழி இறப்புகள் ஏற்படவில்லை ”என்று ஒரு மூத்த மருத்துவரை தி இந்து நாளிதழ் மேற்கோள் கட்டியது.
எழும்பூர் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 294 கர்ப்பிணி பெண்களில், 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 229 கர்ப்பிணி பெண்களில், 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 30 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுகள் சொல்வதென்ன?
பிரசவ காலத்தில், பெண்களின் நுரையீரலின் விரிவாக்கம் தடைபடுவதினால், அவர்கள் சுவாசித்தலில் பாதிப்பை விளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு எளிதாக ஆளாகிவிடுகின்றனர். இந்த கால கட்டத்தில் அவர்களால் முகக்கவசம்தொடர்ந்து அணிய முடியாத சூழல் ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களிடையே கொரோனா தொற்றுக்கான பாதிப்பு அதிகமாக உள்ளபோதிலும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் நோய்த்தொற்று பரவுமா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை எந்த இடத்திலும் கண்டறியப்படவில்லை.