வெளிமாநிலங்களில் தங்கி பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்களின் நிறுவனத்திற்கு செல்ல முயன்று வருகின்றனர். இருப்பினும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்காக ”சேவா சிந்து” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது கர்நாடக அரசு. அப்படி வரும் நபர்கள் 3 நாட்களுக்கு அரசு கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இந்நிலையில் ஓசூர் எல்லை பகுதியான ஜூஜூவாடியில் இருந்து கர்நாடகாவில் எல்லை பகுதிக்கு நடந்து சென்றவர்களை கர்நாடக காவல்துறை தடுத்து நிறுத்தியது. அவர்களை தமிழகத்திற்கே திரும்பி போகசொல்லி கேட்டுக் கொண்டது. மேலும் சேவா சிந்து இல்லாமல் யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவித்து அவர்களை அப்புறபடுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவும், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.