முனைவர் கமல. செல்வராஜ்
தலையில் வளர்ந்த பேனுக்குப் பயந்து, தலை மயிருக்குத் தீ வைத்தக் கதை” என ஊர்புறங்களில் ஒரு பழமொழி கூறுவார்கள் அந்த நிலைதான் தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வை ரத்துச் செய்து விட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்னும் அரசின் அறிவிப்பு உணர்த்தியுள்ளது.
தமிழகத்தின் ஒரு சாபக்கேடு என்றால் அது கல்வித்துறையை, “எடுப்பார் கைப்பிள்ளைப்” போல் நடத்தப்படுவதாகும். அது பாடத்திட்டங்கள் உருவாக்குவதிலிருந்து, தேர்வுகள் நடத்துவது, முடிவுகள் வெளியிடுவது, விடுமுறைகள் அறிவிப்பது வரை எவ்வித முன்கருதலும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில்தான் இருக்கும். அதற்குப் பல உதாரணங்களை அடுக்கியடுக்கிக் கூற முடியும். என்றாலும் தற்பொழுது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எடுத்திருக்கும் முடிவானது அதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.
கொரோனாவின் தாக்கம் இன்று முடியுமா? நாளை முடியுமா? இல்லை என்று முடியும்? என்ற முடிவான முடிவை யாராலும் அறிதியிட்டுக் கூறுவதற்கு முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் சுமார் இரண்டரை மாதங்கள் அனுபவித்த லாக்டவுனால், கொரோனா என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்து கொண்டு, அதன்படி தங்களின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பழகிக் கொண்டுள்ளார்கள்.
அதனால் மக்களின் இயல்பான வாழ்க்கையை இனியும் முடக்கிப்போட்டு வேடிக்கைப் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பொதுவாக எடுத்து வந்தபோது அனைத்தும் ஒரளவுக்கு முறையாகவே நடந்து வந்தன. ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளின் விருப்பப்படி நடவடிக்கை எடுக்க அனுமதியளித்ததிலிருந்து, எல்லாம் தான்தோன்றித்தனமாகவே நடக்கின்றன. இதனால் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில் இரண்டுமுறை மாற்றி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, இம்மாதம் 15 ஆம் தேதி நடத்துவதற்கான 90 சதவீத முன்னேற்பாடுகளும் நடந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குத் தயாராக இருந்த நிலையில், தற்பொழுது திடீரென ரத்துச் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆல் பாஸ் என்று அறிவித்ததோடு மட்டும் நின்று விடாமல், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மார்க்கும், மாணவர்களின் வருகையின் அடிப்படையில் 20 சதவீத மார்க்கும் கணக்கிடப்படும் என்றும் அதிபுத்திசாலித்தனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்களின் விடைதாள் எப்படித் திருத்தப்படும் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமானதாகும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு அதிக மார்க் கொடுத்தால், அவர்கள் பிறகு நன்றாகப் படித்துப் பொதுத்தேர்வுக்கு நல்ல மார்க் வாங்க மாட்டார்கள் என்ற தவறான உளவியல் கோட்பாட்டை அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கடைபிடித்து வருகின்றனர். அதனால் இந்த இரண்டு தேர்வுகளின் விடைத்தாளைத் திருத்தும் போதும், எவ்வளவு சரியாக மாணவர்கள் விடை எழுதியிருந்தாலும் மிகக் குறைவான மார்க்குதான் வழங்குவார்கள்.
அதனால் இந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மார்க் வழங்குவது எந்த வகையில் நியாமாகும் என்பது இப்படியொரு முடிவெடுத்த அதிமேதாவிகளுக்குத்தான் வெளிச்சம்.
அடுத்து மாணவர்களின் வருகையின் அடிப்படையில் 20 சதவீத மார்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குக் கட்டணம் கட்டுவதற்கு முன்பு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்த முடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகைப் பதிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியிருப்பார்கள். அப்பொழுது எல்லா மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருகை இக்கத்தானே செய்யும். அதன் பிறகு எப்படி வருகையை வைத்து 20 சதவீத மார்க் போடுவது?
பொதுவாக தனியார் பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் எல்லா நாளும் வருகைப் பதிவு செய்யப்படும் என்பது பரம ரகசியம். அப்படியென்றால் இம்முறையும் எப்படிச் சாத்தியமாகும்? என்பதும் புரியாத புதிராகவேயுள்ளது.
தேர்வு ரத்து செய்ததால் ஒரு பிரிவு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நாள் முழுக்க ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல், விளையாடாமல், தூங்காமல் கண்விழித்திருந்து படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் என நினைத்து படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவி புரிந்த பெற்றோருக்கும் இது இம்மியளவுக்கும் மகிழ்சியளிக்காது. மாறாக வாழ்நாள் முழுவதும் இது வேதனையளிக்கும் நிகழ்வாகவே இருக்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் +1 மீதியுள்ளத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதும் கல்லூரி மாணவர்களும் ஏதேனும் விகிதாசாரத்தில் அவர்களின் தேர்வுகளும் ரத்துச் செய்யப்படாதா? என எதிர்பார்க்கின்றனர்.
எனவே பத்தாம் வகுப்பு தேர்வை வேண்டுமென்றால், கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்குத் தீரும் வரை நீண்ட நாளுக்கு தள்ளி வைத்திருக்கலாமே தவிர இப்படி ஒரேயடியாக ஆல் பாஸ் செய்திருப்பதும், இவ்விரு முறையில் மார்க் வழங்க இருப்பதும் எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )