ஞாயிறு, 7 ஜூன், 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் படிப்படியாக குறையும் - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, செப்டம்பர் மாதத்தில், படிப்படியாக குறையும் என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா நோயாளிகள், அவர்களிடமிருந்து பரவிடும் தொற்று ஆகியவற்றை, சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுவதும் கண்டறிந்து, துல்லியமாக சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தற்போது கொரோனா பாதித்தவர்களில், குணமடைந்தோர் விகிதம் 42 விகிதமாக உள்ளதை, அடுத்த சில மாதங்களில் 100 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் நம் நாட்டில் படிப்படியாக கொரோனா தொற்று குறையும் , எனவும்  'பெய்லி'  என்ற முறையில் மத்திய சுகாதாரத்துறை கணித்துள்ளது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2,லட்சத்து 46 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 292 பேர் குணமடைந்து, வீடு  திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 287 பேர் கொரோனாவின் கோரத்திற்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை, 6 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.