கொரோனா சிகிச்சை தொடர்பாக டெல்லி மருத்துவர்களை எச்சரித்த முதல்வர் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளுக்கு டெல்லி மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்திருந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் போதிய வெண்டிலேட்டர்கள், படுக்கைகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அரசின் வழிமுறைகளை பின்பற்றி கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்திற்காக தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது அம்மாநிலத்தில் மருத்துவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள டெல்லி முதல்வருக்கு டெல்லி மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருவதாகவும், முதல்வரின் எச்சரிக்கை அவமதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகள் மற்றும் மற்ற நோயாளிகளுக்கு சேவை செய்வதில் மருத்துவமனைகள்தான் முதுகெலும்பாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்ததற்கும் கண்டனம் தெரிவித்துள்ள அவர்கள், முதல்வரின் நடவடிக்கை மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பு பணியால் ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் அழுத்தம் தர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனைக்கான உபகரணங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் டெல்லி மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.