சனி, 20 ஜூன், 2020

சென்னையில் இருந்து வெளியேறிய மக்கள்: மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கும் அபாயம்

அருண் ஜனார்தனன்

கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்த சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக சென்னையை விட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என தமிழக சுகாதாரத் துறை அஞ்சுகிறது. இதன் காரணமாக மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடக்கூடும்

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று உச்சத்திற்குப் பிறகு, சுமார் ஒரு மாதம்  மிகக் குறைவான தொற்றுகளை பதிவு செய்த மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்கள் இப்போது தினமும் கணிசமான அளவு தொற்று எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டில் 2,115 புதிய தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. இதனால் மாநிலத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 666 பேர் உயிரிழந்துள்ளனர், நேற்று மட்டும் 41 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மூத்த சுகாதார அதிகாரி ஒருவர், சென்னையிலிருந்து வரும் அனைவரையும் பரிசோதிக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். “எல்லோரையும் பரிசோதிக்க முடியாததால் அறிகுறிகள் உள்ளவர்கள்  பரிசோதிக்கப்படுகிறார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “அடுத்த வாரத்திற்குள் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என அந்த அதிகாரி கூறினார்.

தெற்கு மண்டலத்தை கண்காணிக்கும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, ”ஒவ்வொரு மாவட்டத்திலும் அரை டஜன் சோதனைச் சாவடிகள் உள்ளன.  அவர்கள் மக்கள் வருகை தரும் விவரங்களை பதிவு செய்கிறார்கள். மற்ற இடங்களிலிருந்து வந்தவர்களைக் கண்டுபிடிக்க கிராம விஜிலென்ஸ் குழுக்கள் மற்றும் காவல்துறையினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

ஆரம்பத்தில் தொற்றுகள் அதிகரித்ததைக் கண்ட கோயம்புத்தூர், பின்னர் குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மதுரை மேலும் தொற்று எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி 268 தொற்று எண்ணிக்கையை ஒப்பிடும்போது, வெள்ளிக்கிழமை 550 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

முதல் கிராம விஜிலென்ஸ் கமிட்டியை வெற்றிகரமாக அமைத்த திருநெல்வேலியில், ”வழக்குகளின் எண்ணிக்கை உயரக்கூடும், ஆனால் அதிகபட்ச நபர்களை பரிசோதிப்பதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் டி.சி.பி., சரவணன். “எல்லா பொது இடங்களிலும் டிஜிட்டல் போர்டுகளை நாங்கள் நிறுவியுள்ளோம், ஆபத்தை குறைக்க முகமூடி அணிவது, சமூக விலகல் மற்றும் ஆரோக்கியமான உணவின் உதவிக்குறிப்புகள் ஆகியவற்றைப் பயிற்சி செய்யுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்காசி, திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த தொழிலாளர்களையும், குறிப்பாக மும்பை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் சுகாதாரத் துறையால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் எல்லையான ராமநாதபுரம் மற்றும் தேனியும் இரண்டாவது அலையின் தொற்று  எண்ணிக்கைகளின் அறிகுறிகளைக் காட்டியுள்ளன என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “மிக முக்கியமாக, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பல தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவை குறிப்பிட்ட பயண வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.