சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் வாகனங்களை இயக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
➤ மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤ மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்ஸியை பயன்படுத்த அனுமதி எனவும்,
➤ இது தவிர, பிற காரணங்களுக்காக வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤ அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களை பயனபடுத்தாமல், அருகிலேயே நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤ பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
➤ தண்ணீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வானங்கள் தங்கள் நிறுவனங்களிடம் இருந்து உரிய அனுமதி சீட்டை பெற்று கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤ அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.